பெண் போலீஸ்.  குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1932

Rate this item
(0 votes)

இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம். பரீக்ஷார்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப்படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தியோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்க ளென்பதே. 

"போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்” என்று போலீஸ் தலைமை சூப்பரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-1-32 s வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது. 

இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சி யையும். பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் உண்டாக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கிய வர்கள். அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள் என இதுவரை மதம். கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவை களின் பேரால் அடக்கி, ஒடுக்கி, மிதித்து, ஆழ்த்திக்கொண்டிருக்கும் சுயநலக் கூட்டத்தார்களுக்கு, வைதீக வெறியர்களுக்கு தலையில் இடி விழுந்தாற் போல் தோன்றலாம். தங்கள் மதமே அழிந்து விட்டதாகக் கருதலாம். ஆனால் கால மாறுதலையும், உலக முற்போக்கையும், பெண்களது அதி தீவிர உணர்ச்சி களையும், ஒருக்காலும், யாராலும் தடுக்கவியலாது என்பதை அவர்கள் அறியவேண்டும். 

"அடுப்பங்கரையே கைலாசம், ஆம்படையானே சொர்க்கலோகம்” என்ற எண்ணத்தில் பெண்களை வைத்திருந்த காலம் போய் இன்று பெண் உலகம் தனக்கு ஆடவரைப்போல எல்லா உரிமைகளும் வேண்டும். தாங்கள் எவ்வகையிலும் ஆடவரினும் தாழ்ந்தவரல்லர் இயற்கையாய் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுதந்திரங்களை நல்க வேண்டுமென வீரமுழக்கம் செய்கிறார்கள். பெண்கள் உரிமை இயக்கம் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றே வருகின்றது. பெண்கள் படிக்கலாகாது. படித்தால் கெட்டு விடுவார்கள் என்று வாய் வேதாந்தம் பேசிய சோம்பேறிக் கூட்டத்தார் பெண்கள் படித்துப் பட்டம் பெற்று டாக்டர்களாகவும், உபாத்தினிகளாகவும், தாதிகளாகவும், வக்கீல்களாகவும் இருப்பதைக் கண்டு என்ன செய்து விட்டார்கள். அஃதே போல் சாரதா சட்டமோ, இளமை மண தடுப்புச் சட்டமோ பிரஸ்தாபத்திற்கு வந்தபோது “மதம் போச்சு” என்று கத்தியது தவிர கண்ட பலன் ஒன்று மில்லை. அது போலவே இன்றும் பெண்களாவது போலீசில் சேரவாவது" என்றும் சொல்லலாம். ஆனால் பெண்கள் அவர்களது சுயநல எண்ணத்தை மெய்ப்பிக்கத் தக்கவாறு நடந்து கொள்ளல் வேண்டும். சுமார் 2 வருஷ காலத்திற்கு முன்பிருந்தே அகில இந்திய மாதர் சங்கத்தார் பெண்கள் போலீசில் சேர்க்கப்படல் வேண்டுமென வற்புறுத்தி வருகிறார்கள். மேல் நாடுகளில் பெண் போலீசார் துப்பறிவதிலும் குற்றங்களைக் கண்டுபிடிப்ப திலும் அதிக சாமர்த்தியம் வாய்ந்திருக்கிறார்களென்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆகையால் இன்று தங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக் கின்ற பெண் மக்கள், தங்கள் சுதந்திரத்திற்காக வாதாடும் பெண்மக்கள், தங்கள் சமத்துவத்திற்காக விழையும் பெண் மக்கள் சர்க்காரால் கொடுக்கப்பட்ட இவ் வரிய சந்தர்ப்பத்தை என்ன செய்யப் போகின்றார்கள்? 

"சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினிலே பெண்கள் செய்ய வந்தோம்" என்ற கவி பாரதியாரின் வீர மொழிகளை மெய்ப்பிப்பார்களா? 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1932

 
Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.